வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை தினத்தன்று, வெண்மணி நகர் மோட்டூர் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், பக்தர்கள் இன்று (மார்ச் 15) அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கரகம் வைத்து பரிகார பூஜை நடத்தினர். இதில், அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் படையல் இட்டு கூழ் வார்த்தனர்.
பின்னர் பம்பை மேளம் முழங்க, சாமி வழிபாடு செய்த போது அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்கள் மீது இறங்கி, தனக்கு நீங்கள் இடப்பட்ட படையல் போதவில்லை எனக் கூறியது, பின்னர் அப்பகுதி மக்கள் கோழி பலியிட்டு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்தனர். அதன் பிறகு, கரகத்தை பம்பை மேளம் முழங்க வெண்மணி நகர் மோட்டூருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
முன்னதாக, வேலூரில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது மயான கொள்ளை திருவிழா. இத்திருவிழா கடந்த மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவில் விருதம் பட்டு, கழிஞ்சூர், வெண்மணி நகர் மோட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 60 அடி உயரம் கொண்ட தேரானது பிரமாண்டமாக ஊர்வலமாக வந்து பாலாற்றங்கரையில் நின்றது.
அப்போது திடீரென தேர் சாய்ந்து விழுந்து தரைமட்டமானது. இதில் தேர் விழும் திசையில் யாரும் இல்லாததால் எந்த ஒரு உயிர்ச்சேதமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"அரசியல் சதி என்று கூற மாட்டேன்.. சட்டப்படி எதிர்கொள்வேன்" - பிஎஸ் எடியூரப்பா!