சென்னை: ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். அதற்காக அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு வழிபாடுகள், திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொரட்டூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது. அதில், 1008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்லும் காட்சி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது.
சென்னை கொரட்டூரில் அமைந்துள்ளது அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம். இக்கோயில் பல்லவ மன்னர்களான ராஜசிம்மன், நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்து தெரிவித்துள்ளனர். தொன்மை மற்றும் மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஆடி மாதத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் ஆடி மாதத் திருவிழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஆடி மாதம் நான்காம் வார திருவிழாவை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்மனின் தாய் வீடான கொரட்டூர் கருமாரியம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.