சென்னை:சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறுகையில்,"முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதியைக் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
அதன்படி 87 கோடியே 35 லட்சத்தை ஒதுக்கி இருக்கிறோம். இதில் பரிசு தொகை மட்டுமே 32 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற வருடம் முதலமைச்சர் கோப்பை போட்டியில் தமிழ்நாடு முழுக்க ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பதிவு செய்து விளையாடினர். இந்த வருடம் மொத்தம் 12 லட்சம் வீரர்கள் பதிவு செய்து விளையாடி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 15 நாட்கள் நடத்தப்பட்ட மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. இதில் 32,700 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களிலும் இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.