ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், காரை கூட்ரோட்டில் உள்ள மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் 288 கிராம ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான, 364 Kalaignar Sports Kits வழங்குதல், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி துறை மூலம் ரூ.19.21 கோடி மதிப்பில் 13 புதிய அரசு பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.9.15 கோடி மதிப்பில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை திறந்து வைத்தல், பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 7,165 பயனாளிகளுக்கு ரூ.37.79 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கைத்தறித் துறை அமைச்சர் ஆர் காந்தி செங்கோல் வழங்கி சிறப்பித்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில், துணை முதலமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், யாசினி ஆகிய இரண்டு வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி துணை முதலமைச்சர் கௌரவித்தார்.
பின்னர் விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர், "அம்பேத்கர் கொள்கையை கொண்டு செல்லும் திராவிட மாடல் அரசாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசின் ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். பெண்கள் சுய மரியாதையுடன் வாழ, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.