சென்னை:தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு என்பது கட்டுக்குள் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் சென்னை, அரசு இராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 3 இலட்சமாவது பயனாளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்னும் திட்டத்தை 2021 டிசம்பர் 18 ந் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் எந்த சாலைகளில் விபத்துகள் நேர்ந்தாலும் அவர்களுக்கு உடனடியாக முதல் 48 மணிநேரத்தில் ரூ.1 லட்சம் அரசு உதவி என்கின்ற வகையில் தந்து அவர்களது உயிர்களை காப்பாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் 3 இலட்சமாவது பயனாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
டெங்குவினால் ஒரு சிறுமியின் இறப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறும்போது, மருத்துவத்துறை 41 மாத காலமாக சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார், அவர் அறிக்கை விடும்போதெல்லாம் தொடர்ந்து அவருக்கு பதில் சொல்லி வருகிறேன். மருந்து இல்லை என்றால் எந்த மருத்துவமனையில் இல்லை என்று கேட்டோம், சேலம் என்றார், சொன்ன உடனேயே சேலத்திற்கு சென்று எந்த மருந்து இல்லை என்றாரோ அந்த மருந்து இருப்பை காண்பித்தோம்.