தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அடுத்த இரு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - டெல்டா வெதர்மேன் தகவல்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என டெல்டா வெதர்மென் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை : ஃபெஞ்சல் புயல் காரணமாக, உள் மாவட்டகளில் 40 செ.மீ மழை பதிவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறித்தும், அடுத்த வானிலை நிகழ்வு குறித்தும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து மிகவும் மெதுவாக நகர்ந்ததால் அதி கன மழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் புயல் முழுமையாக நகர்வதற்கு பல மணி நேரங்கள் எடுத்துக் கொண்டது.

அதன் பிறகு திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கூட மெதுவாக நகர்ந்து சென்றதால் குறுகிய நேரத்தில் பெருமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் குறுகிய நேரத்தில் பெருமழை பதிவு இருக்கிறது.

ஃபெஞ்சல் புயல் தற்போது அரபிக்கடல் நோக்கி நகர்ந்து இருக்கிறது. இதன் காரணமாக கீழ் திசை காற்றை ஈர்க்க தொடங்கும். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, கடலோர மாவட்டங்கள் உட்புற தமிழகம் தென் மாவட்டங்களில் பரவலாக மழை எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க :பேயாட்டம் போட்ட ஃபெஞ்சல் புயல்: 300 ஆண்டுகளில் நடந்ததே இல்லை

அடுத்து இரண்டு நாட்களில் வரும் மழையால் பாதிப்புகள் இருக்காது. ஆனால் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் பதிவாகும் பொழுது தாக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே மழை பொழிவு அதிகமாக இருந்ததால் மழையினுடைய தாக்கமும் சற்று கூடுதலாக இருக்கும். தற்போது அந்த பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவானாலும் பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டு நாட்கள் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

கீழ்த் திசை காற்று முழுமையாக ஈர்க்கப்பட்ட பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மழையின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தாலும், சென்னையை பொறுத்தவரையில் பாதிக்கக்கூடிய மழையாக இருக்காது.

உள் மாவட்டங்களில் தான் கனமழை முதல் மிக கனமழை பதிவாகி இருக்கிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பதிவாயிருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மழையின் தீவிரம் குறைந்திருக்கும். ஆனால் ஆங்காங்கே மழை எதிர்பார்க்கலாம். டிசம்பர் 4ம் தேதிக்கு பின்னர் இந்த சலனத்துக்கான தாக்கம் படிப்படியாக விலகும். அடுத்த நிகழ்வாக டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு வடக்கிழக்கு பருவமழைக்கான மழை எதிர்பார்க்கலாம்.

தற்போது திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதை பார்க்கலாம். ஆனால் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு போன்று இருக்காது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதை அடுத்த இரண்டு நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது. மழை குறைந்தாலும் அருவிகளில் நீர் பெருக்கு அதிகரிக்கும். எனவே சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிரக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details