சென்னை:டெல்லியில் 2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், இவருக்கு உடந்தையாக செயல்பட்ட சதானந்தம், முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக்குமார் ஆகிய ஐந்து பேரும் விசாரணைக்கு பின்பு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்த ஐந்து பேரையும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். அப்போது வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்து அதில் ஜாபர் சாதிக் பல்வேறு நபர்களிடம் பேசிய ஆடியோ பதிவுகளை கைப்பற்றி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைக்காக ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பிறகு அதனை உறுதி செய்யப்பட்ட பின்பு தொடர்ந்து விசாரனை நடத்தப்பட வேண்டும் எனவும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து திகார் சிறைக்குச் சென்று ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரி பதிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜாபர் சாதிக் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வருகிற ஐந்தாம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்லீப்பர் செல் யார்? சீமானுக்கு அண்ணாமலையின் கேள்வி! - Annamalai Vs Seeman