தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு; பழைய சட்டப்படி விசாரிக்க தயாநிதி மாறன் தரப்பு வாதம்!

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என எம்பி தயாநிதி மாறன் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து, எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமி
எம்.பி.தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தனது தொகுதி நிதியில் 95 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமியும் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க:சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடி மரம்.. எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு

அப்போது, தயாநிதி மாறன் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “புதிய சட்டத்தின் படி இந்த வழக்கை விசாரிக்க முடியாது. பழைய சட்டத்தின் படி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். பழைய சட்டத்தின் படி சாட்சி விசாரணை தொடங்க உள்ள நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐயப்பராஜ் மற்றும் பாலமுருகன் ஆகியோர், மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details