தமிழ்நாடு

tamil nadu

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள் கண்டெடுப்பு! - Keezhadi Excavation

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:12 PM IST

KEEZHADI EXCAVATION: சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுடு மண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள்
சுடு மண்ணால் ஆன உருளை வடிவ குழாய்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே 9 கட்ட அகழாய்வுப் பணிகள் மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஜூன் 18-ம் தேதி கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கீழடியில் நகர நாகரிகம் நிலவியதை தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தியது. கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது என்பதை கரிம பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நிறுவியது.

மேலும், இதனை நூலாக வெளியிட்டு உலகறியச் செய்தது. நகர நாகரிகம் என்பதற்கு பல்வேறு கூறுகள் உண்டு. வாழ்விடப் பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர் மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள் போன்றவை இக்கூறுகளில் அடங்கும்.

கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. கீழடியில் நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.

அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கலால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலான குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறைகிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சங்ககால தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர்மேலாண்மையின் சிறப்பினை அறிகிறோம். அந்த வகையில், இன்று கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு உறைகளுடன் காணப்படும் இச்சுடுமண் வடிகாலானது, மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் மற்றும் அகலம் முறையே 36 செ.மீ, 18 செ.மீ ஆகும்.

தற்பொழுது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளம் கொண்டுள்ளது. இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்த குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கான பணிகள் தொடரும் என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:சூரி பட பாணியில் பரோட்டா பந்தயம்; வைரலாகும் திருச்செந்தூர் பரோட்டா கடை போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details