சென்னை:தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஃபெஞ்சல் புயலாக (Cyclone Fengal) மாறிய நிலையில், இன்று வடமேற்கி திசையில் நகர்ந்து பிற்பகலில் காரைக்கால் - மகாபலிபுரத்திற்கு இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில், பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும், புயல் கரையைக் கடக்கும் போது, பலத்த காற்று மணிக்கு 70 -80 கிலோ மீட்டர் வேகத்தில், அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும், ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனமழைக்கு வாய்ப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்றும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 13 விமானச் சேவைகள் ரத்து!