சென்னை: ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) இன்று (நவ.30) சனிக்கிழமை கரையைக் கடக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய எடிஆர் ரக சிறிய விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன.
புயல் காரணமாக சென்னையில் இருந்து விஜயவாடா, துபாய், திருச்சி, புவனேஸ்வர், மதுரை, கோவை, சிங்கப்பூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, அந்தமான் உள்ளிட்ட 12 புறப்பாடு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதேபோல் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும், மிகவும் கவனமாக ஓடுபாதை தெளிவாக இருந்தால் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் தரையிறங்க வரும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து, பின்னர் தரையிறங்கப்படுகிறது.
வானில் வட்டமடித்த விமானம்:
குவைத் நாட்டில் இருந்து இன்று காலை 6:35 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையம் அருகே வந்தடைந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்துள்ளது. அதன் பின்னர், ஓடு பாதை சீரானதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் தரையிறங்க அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.