சென்னை:தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் ராதாகிருஷ்ணன், இன்று (மே 11) மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் ராதாகிருஷ்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “எனது பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் தொடங்கி, தனக்கு நெருக்கமானவர்களிடம் அவசர தேவை என்று பணம் கேட்டு சிலர் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக எனக்கு நெருக்கமான பலரும் போன் செய்து, என்னிடம் இந்த மோசடி குறித்து தெரிவித்த போது எனக்கு தெரிய வந்தது. இதனால் உடனடியாக மோசடி செய்யும் அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த நபர் வடமாநில நபர் என்பது தெரிய வந்தது. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறியவுடன், அந்த நபர் எனது புகைப்படத்தை நீக்கினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.