சென்னை: சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வழக்கம்போல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (பிப்.9) நள்ளிரவில் தரையிறங்கியது. இதனையடுத்து, விமானத்தில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
அப்போது இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக ஹாங்காங் சென்றுள்ளார். அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்புவதற்கு, ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். அந்தப் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் கடத்தல் விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை வெளியில் விடாமல், சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய உடமைகளை முழுமையாக பரிசோதித்துள்ளனர். அதில், அவருடைய உடைமைக்குள் விலை உயர்ந்த இரண்டு நவீன ரக கைக்கடிகாரங்கள் இருந்துள்ளன.
பேட்டிக் பிலிப்ஸ் 5740 (Philips 5740), பெர்கெட் 2759 (Breguet 2759) ஆகிய ரகங்களைச் சேர்ந்த அந்த கைக்கடிகாரங்கள், இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வராதது என்றும், பெரும் பணக்காரர்கள் மட்டுமே அந்த ரக கைக்கடிகாரங்களை உபயோகப்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இதன் மதிப்பு ரூபாய் 1.7 கோடி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை வெளியில் விடாமல் அறையில் அடைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அந்தப் பயணி ஹாங்காங் நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வருவதற்காக, ஹாங்காங் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, இரண்டு பேர் அவரிடம் சென்று, அந்த கைக்கடிகாரங்கள் இருந்த பார்சலை, அவரிடம் கொடுத்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, "இதில் இரண்டு கைக்கடிகாரங்கள் உள்ளது. அதை நீங்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லுங்கள். சென்னை விமான நிலையத்தில் எங்களுடைய நண்பர்கள் இருவர் உங்களைச் சந்தித்து, இந்த கைக்கடிகாரங்களை வாங்கிக் கொள்வார்கள். அதற்காக உங்களுக்கு அன்பளிப்பாக பணம் கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி என்னை அவர்களுடைய செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோவை சென்னையில் உள்ள எங்கள் நண்பருக்கு அனுப்பி விடுவோம். அவர் உங்களை சென்னை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு கொள்வார் என்று கூறினர்.
அதை நம்பி, நான் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த இரண்டு கடிகாரங்களையும் வாங்கி வந்தேன். இதில் இவ்வளவு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருக்கும் என்று எனக்குத் தெரியாது" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுங்க அதிகாரிகள் அந்த 2 கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்ததோடு, கடத்தி வந்த இந்தியப் பயணியைக் கைது செய்தனர். மேலும், அந்தப் பயணியின் செல்போன் பதிவுகள், எதற்காக இவர் கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!