தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை டூ சென்னை.. அத்தர் பாட்டில்கள், அகில் மரக்கட்டைகளை கடத்தி வந்த பயணிகள் கைது! - Chennai Airport - CHENNAI AIRPORT

Chennai Airport: கொழும்பில் இருந்து சென்னைக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள அகில் மரக்கட்டைகள் மற்றும் அகர் அத்தர் பாட்டில்களை கடத்தி வந்த இரு பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அத்தர் பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட அத்தர் பாட்டில்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 4:32 PM IST

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி விசாரித்தனர்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் சுற்றுலா பயணிகளாக சென்னைக்கு வந்திருந்தனர். அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்கள். அதோடு அவர்கள் வைத்திருந்த பைகள் மற்றும் சூட்கேஸிலிருந்து, உயர்ரக வாசனை திரவியங்களின் நறுமனம் வீசியது. இதனால் இரண்டு பேரின் பைகள் மற்றும் சூட்கேஸை திறந்து பார்த்து சோதித்தனர்.

அவற்றுக்குள் சுமார் 20 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது அதிக நறுமணம் தரக்கூடிய அகில் மரக்கட்டைகள் சுமார் 20 கிலோ இருந்தன. அதோடு மற்றொரு பையில் மிக விலை உயர்ந்த அகர் அத்தர் ஆயில் பாட்டில்கள் 15க்கும் மேற்பட்டவைகள் இருந்தன.

இந்த அகில் மரம் சந்தன மரத்தை விட அதிக நறுமணம் கொடுக்கக்கூடிய அபூர்வ வகை மரமாகும். இதை வீடுகளில் வளர்ப்பது சர்வதேச வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இந்த மரங்கள் இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளிலும், நாகா மழை காடுகளிலும், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அதிகமாக அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.

அதேபோல் இந்த மரங்களில் வடியும் பிசின்களில் இருந்து அகர் அத்தர் ஆயில் கிடைக்கிறது. இந்த ஆயில் அதிக நறுமணத்துடன் கூடிய உயர் ரக வாசனை திரவியமாகும். இது மிகவும் விலை உயர்ந்தது. பின்னர் சுங்க அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்திய போது, இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. மேலும், சர்வதேச வனத்துறையின் அனுமதி இல்லாமல் இவைகளை கடத்திக் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த அகில் வாசனை மரக்கட்டைகள் மற்றும் அகர் அத்தர் ஆயில் ஆகியவைகளின் மதிப்பு இந்தியாவில் குறைவாக இருந்தாலும், சர்வதேச அளவில் இதன் மதிப்பு பன் மடங்கு அதிகம். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.40 லட்சம். இவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு பயணிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:சென்னை ஐஐடிக்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா! - IIT Alumnus Dr Krishna Chivukula

ABOUT THE AUTHOR

...view details