சென்னை: மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலான சென்னைக்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் (இன்று முதல்) மூன்று நாட்கள் நடைபெறும் வீட்டு வசதிக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தென்னிந்தியாவின் மிகப்பெரும் சொத்துக் கண்காட்சி இது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென உணர உதவுவது கட்டட வளர்ச்சி தான். இந்த கண்காட்சி வளர்ச்சியின் அடையாளம். கிரெடாய் அமைப்பினர் மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் முக்கியமானவர்கள். மக்கள்தொகை தொடர்ந்து பெருகி வரும் நிலையில் மக்களின் அனைத்து தேவைகளையும் அரசே நிறைவேற்றி விட முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தனியார் அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் 48 விழுக்காடு மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இது வரும் ஆண்டில் மேலும் உயரும். தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகமாக உள்ளது. எனவே மக்களுக்கான வீட்டு வசதி தேவைகள் அதிகரிப்பதால் புதிய நகரமைப்பு திட்டங்களை தீட்ட வேண்டியுள்ளது. சென்னைக்கான முதல் இரண்டாம் முழுமைத் திட்டங்களை தொடர்ந்து 3 வது முழுமைத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முழுமை திட்டங்கள் நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப முன்முயற்சி, நகர வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. சென்னைக்கான 3வது முழுமை திட்டம் அடுத்த 20 ஆண்டுக்கான சென்னை பெருநகரின் வளர்ச்சியை வழிநடத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம, நகரங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாராகின்றன. கோவை, மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சி, வேலூர், நெல்லையை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கு புதிய திட்டங்கள் தயாராகின்றன. கோவை, மதுரை நகரங்களுக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும். மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலை நகர், திருபெரும்புதூர், பரந்தூர் உட்பட சென்னையை சுற்றியுள்ள 9 வளர்ச்சி மையங்களிலும் 'புது நகர் வளர்ச்சி திட்டம்' தயாராகிறது.
சென்னையை சுற்றியுள்ள பகுதியில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும், சென்னையின் நெரிசலை குறைக்கவும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை பொருளாதார மையமாக மாற்றவும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்தவும் புது நகர் திட்டம் உதவும். கடந்த ஆட்சியின் 10 ஆண்டுகளில் இதுபோன்ற பணிகள் தேக்கமடைந்திருந்தன. மனை, கட்டட விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் தற்போது விரைவாக வெளிப்படையாக வழங்கப்படுகிறது.