மதுரை:நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் சூழலில், தமிழகத்தை பொருத்தமட்டில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் மாதம் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வேட்புமனுவை இன்று (மார்ச் 25) தாக்கல் செய்துள்ளனர்.
அதில் ஒருபகுதியாக, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, திமுக அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும், சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மாற்றாக சி.பி.எம் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக, திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.