திருநெல்வேலி: திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடத்தி வைக்கப்பட்ட சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெற்றோர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட பிரச்னையில் நிர்வாகிகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பெருமாள் புரம் போலீசார் ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "சமூக விரோத சாதிவெறி சக்திகள் மீது அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாதிவெறி செயல்கள் நடந்து வருவது தொடர்கதையாக இருக்கிறது. அய்யா வைகுண்டர் உள்ளிட்ட சாதி மறுப்பு தலைவர்கள் அதிகம் பிறந்த மண்ணில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருநெல்வேலி நடைபெற்ற சாதி மறுப்பு திருமணத்தை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பல்வேறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பாதுகாப்பு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பக்கபலமாக திகழும்.
அரசு சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உரியப் பாதுகாப்பை அளித்து அரசு வேலை வழங்க வேண்டும், அரசு பாதுகாப்பு அளிக்க தவறினால் கடைசி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சாதி ஆணவ படுகொலைகள் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் நிறைவேற்றுவதற்கான மசோதா உச்சநீதிமன்றத்தால் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.