திண்டுக்கல்: வருகிற ஏப்ரல் 19ஆம் முதல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பயணங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். குறிப்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தத்துக்கு ஆதரவாக, அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரசார மேடையில் பேசிய அவர், "தற்போது நாம் சந்திக்கவுள்ள 18வது நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. இது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கக்கூடிய தேர்தல். அதற்காகத்தான் நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை (INDIA Alliance) உருவாக்கியுள்ளது" எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மோடி அரசாங்கம் ஜனநாயக முறைப்படி இந்த தேர்தலைச் சந்திக்க முடியாமல்தான் எதிர்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு தேர்தலைச் சந்திக்க நினைக்கிறது. அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகிய நாட்டின் இரண்டு மாநில முதலமைச்சர்களை கைது செய்து, எதிர்கட்சிகளைச் சமாளிக்க திராணியற்ற பாஜக அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது" என குற்றம் சாட்டினார்.