சென்னை:இன்று இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “சுதந்திரத்திற்காக போராடி எண்ணற்ற தியாகங்களை நினைவுறுத்தி, இந்த 78வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதில் பெருமையடைகிறோம். வெள்ளை ஏகாதிபத்தியத்தை சேவகம் செய்தவர்கள் அனைவரும் இன்றைக்கு இந்தியாவை ஆட்சி செய்து கொண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்றனர், இது மிகவும் வேதனை அளிக்கிறது.
78 ஆண்டு காலத்தில் இந்தியாவில் சாதாரண ஏழை எளிய மக்கள் நாளுக்கு நாள் வேதனை அடைகின்றனர். சுதந்திரம் பெற்றதில் இருந்து எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், இன்னும் ஏழை, உழைப்பாளி மக்களின் நிலை மாறவில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் இந்தியாவின் சொத்துக்களில் சரிபாதியை அனுபவித்து வருகின்றனர். ஆனால், ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அத்துகூலிகளாக இருக்கின்றனர்.
உண்மையான சுதந்திரம் என்பது அனைத்து மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கும் நிலைமைக்காக நாங்கள் மேலும் போராடி வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏழை மக்களுக்கு கொடுக்கும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுவதே உண்மையான சுதந்திரமாக இருக்கும். அதை போராடி கொண்டு வர வேண்டும் என்று உறுதி ஏற்போம்.