சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் முக்கியமான பிரச்சனைகளில் தங்களின் நிலைப்பாட்டை மக்கள் முன்பு வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்திய விவசாயிகள் நிலையை மேம்படுத்த
- விவசாயிகளின் டெல்லி முற்றுகையின்போது மோடி அரசு உறுதியளித்து, நிறைவேற்றத் தவறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுதல் மற்றும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்குதல்.
- விரிவடைந்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, தேசிய கடன் நிவாரண ஆணையம் உருவாக்குதல், பேரிடர் நேரங்களில் துயருற்றவர்களுக்குக் காலம் தாழ்த்தாது முழு திறனுடன் நிவாரண பணிகளைச் செய்தல்
- அனைத்து பயிர்களுக்கும் உள்ளடங்கிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குதல் காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்குதல்
இளைஞர்களும் வேலையின்மையும்
- அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல் மற்றும் அனைவருக்குமான, பகத்சிங் தேசிய வேலை உறுதிச் சட்டம் (BNEGA) இயற்றுதல்.
- அதிக தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தும் ஆலைகளை ஊக்குவித்து, அதன் மூலம் வேலையின்மையைக் குறைத்தல், அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களை நிரப்புதல் மற்றும் இளைஞர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்ய 'தேசிய இளைஞர் கொள்கை' உருவாக்குதல்.
பெண்களும், பாலின நீதியும்
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த எல்லா வழக்குகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுக்கு வரும் வகையில் நீதிமன்றங்கள், விரைவு நீதி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகமாக்குதல்.
- ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான சீண்டல்களுக்கு எதிராகவும், கட்டப் பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிராகவும் சட்டங்களைக் கடுமையாக்குதல்.
- நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தாலும், செயல்படுத்தும் காலம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இனியும் வேறு தடங்கல்கள் எழாமல், செயலுக்குக் கொண்டு வருதல்.