சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு என மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வாக, எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு என்ற பேச்சுவார்த்தையும் இன்று (மார்ச் 12) நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் திருப்பூர் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீட்டுக்கான ஒப்பந்தம் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "நாடாளுமன்றத் தேர்தல் தேதி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக நாட்டு மக்களைத் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளது. பாஜக ஆட்சியில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணம் மீட்கவில்லை, எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றார்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து எஸ்பிஐ வங்கி அதன் விவரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டதை நீதிமன்ற நிராகரித்து இன்றைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.