சென்னை:தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தாம்பரம் பெருநகராட்சியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 70 வார்டுகள் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு தற்போது தாம்பரம் மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்தவர் மேயராக பதவி வகித்து வருகிறார்.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி சார்பாக மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் உள்ள தெருக்களின் பெயர் பலகைகளை புதுப்பித்தும், ஏற்கனவே இருந்த பெயர் பலகைகளில் புதிய ஸ்டிக்கர்களும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒட்டி வருகின்றனர்.
இந்தத் திட்டத்திற்கு 5.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி நான்காவது மற்றும் ஐந்தாவது மண்டலங்களில் சில தெருக்களின் பெயர் பலகையில் புதிய ஸ்டிக்கர் ஒட்டியதில் தெருக்களின் பெயர் தமிழில் தவறாக ஒட்டப்பட்டு இருந்துள்ளது.
வால்மீகி தெரு என ஓட்டுவதற்கு பதிலாக 'வால்மேகி' தெரு எனவும், அழகேசன் தெரு என்பதருக்கு பதிலாக 'அழகோசன்' எனவும், பெரியாழ்வார் தெரு என்பதற்கு பதிலாக 'பெரி ஆழ்வார்' தெரு எனவும் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர்.