சென்னை: சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதனையடுத்து, ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் கொண்டு மருந்து தெளிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் பகுதிகளில் கால்வாய்களில் தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கொசுத்தொல்லை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணிகள் வீடு வீடாகவும், நீர்நிலைகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஃபக்கிங் மிஷின் 440, பவர் ஸ்ப்ரேயர் மிஷின் 109, பேட்டரி ஸ்பிரேயர் மிஷின் 287, வீடு வீடாகச் சென்று கொசுத்தெளிப்பான் அடிக்கக்கூடிய மிஷின் 219, மினி ஃபக்கிங் மிஷின் மழைநீர் வடிகால் பகுதிகளில் அடிக்கக்கூடிய மிஷின் 8 உள்ளது. இதனைத் தொடர்ந்து, வட்டாரத்திற்கு இரண்டாக 6 ட்ரோன்கள் மூலம் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.