சென்னை: ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்யும் விழிப்புணர்வு பாடல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் தேர்தல் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் பாடல் ஒன்றை மாணவர்கள் மிகவும் அருமையாக இயற்றியுள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெருநகரங்களில் வாக்குப்பதிவில் மட்டும் எப்போதும் ஒருவித சுணக்கம் ஏற்படும். அங்கு வாழும் மக்கள் சமூக வலைதளம் உட்பட அனைத்திலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
ஆனால் வாக்குப்பதிவு செய்வதில் மட்டும் அக்கறை காட்டாமல் இருப்பார்கள். அவர்களுக்காகவும் இந்தப் பாடல் இயற்றப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பாடல் இயற்றப்பட்டுள்ளது. அதிலும் கடலுக்குள் சென்று வாக்களிக்கும் வகையில் ஒருவர் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். கடலுக்குள் சென்றே வாக்களிக்கும் போது அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாதா என்ற வகையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவை ஊக்குவிக்க செல்ஃபி பாயிண்ட், தன்னார்வலர்கள், சிறிய அறிவுசார் போட்டிகள் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அரசு அதிகாரிகள் தரப்பில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், மக்கள் தன்னார்வம் கொண்டு வாக்களிக்க முன்வந்தால் மட்டுமே முழு வாக்குப்பதிவை உறுதி செய்ய முடியும். எனவே ஓய்வெடுத்து விட்டேன், கிரிக்கெட் பார்த்தேன் என மக்கள் அலட்சியமாக இருக்காமல் வாக்களிக்க வேண்டும். சென்னையில் மொத்தம் 3,726 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அதில் 769 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அரசிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இருப்பினும் வீட்டு வேலை, கூலி வேலை செல்பவர்களுக்கு வாக்களிக்க விடுப்ப வழங்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம். அதுதவிர அரசிடம் பதிவு செய்யாத நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், அரசு உத்தரவை மீறி நிறுவனங்களை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளோம். எனவே தேர்தல் நாளன்று யாரும் வெளியே சென்றுவிடாமல் ஜனநாயகக் கடைமையான வாக்கை செலுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: அடுத்த 7 நாட்களுக்கு குடையை ரெடியா வையுங்க.. வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு! - TN Weather Update