திண்டுக்கல்:கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து தற்போது வரை 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் இந்தச் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர்.
ஏற்கனவே அதிமுகவினர் சட்டப்பேரவையின் இரண்டாம் நாளில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அமளியில் ஈடுபட்டதாக வெளியேற்றப்பட்டனர். மேலும், சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி இன்று (ஜூன் 25) ஒரு நாள் மட்டும் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கண்டித்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் கள்ளச்சாராயத்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மக்களாகிய நீங்கள் தொலைக்காட்சி மூலம் அறிவீர்கள். அதன் மூலம் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமானது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
விழுப்புரம், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீள வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம். கடந்த 10 ஆண்டுகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த போது கள்ளச்சாராய மரணங்கள் இல்லை. இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டுகளில் தான் செங்கல்பட்டு மாவட்டம், மரக்காணம் பகுதியில் ஏற்கனவே 21 பேர் இறந்தார்கள். இப்பொழுது 50-ஐ தாண்டி கொண்டிருக்கிறது.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். அதற்கு எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.