திருப்பத்தூர்:ஆம்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மற்றும் பார்சல்களை ஏற்றிச்சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து மும்பைக்கு பிஸ்கட் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்.1) அதிகாலை சென்று கொண்டிருந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனையடுத்து கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலிகளை உடைத்து, எதிர்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மற்றும் ஓசூரில் இருந்து சென்னைக்கு பார்சல்களை ஏற்றிச்கொண்டு வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.