சென்னை: சென்னை குரோம்பேட்டை சரஸ்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன் இசக்கியப்பன் (46). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.35 கோடி மதிப்பிலான 5,230 லேப்டாப்களை கொண்டு வந்த கண்டெய்னரை சென்னை துறைமுகத்தில் உள்ள யார்டில் இறக்கி வைத்து சென்றார். மீண்டும் கடந்த 11 ஆம் தேதியன்று துறைமுகத்தில் இருந்து கண்டெய்னரை நிறுவனத்திற்கு எடுத்து செல்ல வந்தபோது அங்கு கண்டெய்னர் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், உடனடியாக சம்பவம் தொடர்பாக சென்ன துறைமுக காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் மாயமான கண்டெய்னர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இசக்கியப்பன் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளவரன் என்பவர் கண்டெய்னரை திருட திட்டமிட்டு துறைமுகத்தில் இருந்து கண்டெய்னரை வெளியெடுக்கும் ஆவணங்களை நிறுவனத்திற்கு தெரியாமல் தயார் செய்து மணிகண்டன் என்பவனிடம் கொடுத்ததும், மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கண்டெய்னரை துறைமுகத்தில் இருந்து லாரி மூலம் வெளியே எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க:ஆளுநர் கையெழுத்துடன் சான்றிதழா, துணைவேந்தர் நியமிக்காமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை பணியாளர்கள் போர்க்கொடி!
மேலும், திருடப்பட்ட கண்டெய்னர் திருவள்ளூர் மாவட்டம் மணவாளண் நகர் பகுதியில் பதுக்கி வைத்திருந்ததை அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து கண்டெய்னரை திருடிய திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த முத்துராஜ் (46), சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (39), திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவை சேர்ந்த நெப்போலியன் (46), சன்னதி தெருவை சேர்ந்த சிவபாலன் (44), திருவள்ளூர் மாவட்டம் பழைய நாபாளையம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (31), கொண்டக்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5,207 லேப்டாப்களையும், கண்டெய்னரை திருட பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியான இளவரசன் உட்பட 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.