தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கி படுகாயம் அடைந்த பெண்.. 32 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! - அப்பள கம்பெனிக்கு அபராதம்

Thiruvarur Consumer court: அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கி படுகாயம் அடைந்த பெண் தொழிலாளி தொடர்ந்த வழக்கில், அப்பள கம்பெனி 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

consumer court ordered to appalam manufacturing company to pay compensation for the victim
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 10:11 PM IST

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலை முடி சிக்கி படுகாயம் அடைந்த பெண்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள நெடும்பலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்பவரது மனைவி கார்த்திகா. இவர் நெடும்பலம் கோயில் சிங்களாந்தி பகுதியில் உள்ள கருடன் அப்பள கம்பெனியில் கடந்த 2023ஆம் ஆண்டில் அப்பளம் பேக்கிங் செய்யும் பணி செய்து வந்துள்ளார். இதற்கு நாள் ஒன்றுக்கு 230 ரூபாய் வீதம் வாரச் சம்பளம் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22.02.2023இல் கார்த்திகாவை அப்பள கம்பெனி உரிமையாளர் சீனிவாசன் அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் பணி செய்ய கூறியதாகவும், தனக்கு இயந்திரத்தை இயக்கத் தெரியாது என்று அவர் கூறிய நிலையில், பணியாளர் ஒருவர் மூலம் ஒருமுறை சொல்லிக் கொடுத்த நிலையில் அவர் அந்த இயந்திரத்தில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது வழக்கமாக இயந்திரம் இயங்கும் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயக்கிய நிலையில், அவரது சேலை முந்தானை இயந்திரத்தில் சிக்கியதாகவும், இயந்திரத்தை நிறுத்த கூறியும் நிறுத்த நிலையில் அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அப்போதும் கூட கார்த்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல், காலம் தாழ்த்தியதால் அங்கிருந்த பணியாளரிடம் கார்த்திகா அவரது கணவருக்கு போன் செய்யக் கூறியுள்ளார்.

அதன் பிறகு கார்த்திகாவின் கணவர் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 67 நாட்களாக உள் நோயாளியாக இருந்து பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட சிகிச்சை மேற்கொண்டு தற்போது வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில், கார்த்திகா படுகாயமடைந்த நிலையில், அவர் பணியாற்றிய அப்பளக் கம்பெனி சார்பாக கார்த்திகாவிற்கு உரிய இழப்பீடு ஏதும் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 03.07.2023 இந்தச்சம்பவம் குறித்து கார்த்திகா திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (பிப்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு, "அப்பள கம்பெனியின் அலட்சியம் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விபத்து நடந்திருப்பதால் கருடன் அப்பள கம்பெனி உரிமையாளர் சீனிவாசன் கார்த்திகாவிற்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 32 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்" என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:பற்கள் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 14 பேர் ஆஜராக நீதிபதி உத்தரவு..!

ABOUT THE AUTHOR

...view details