சென்னை:சென்னை தியாகராய நகரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நேற்று (ஜன.31) மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் இறந்த மாலை 5.11 மணிக்கு "மதவெறி எதிர்ப்பு” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நம் பிரதமர் வரலாற்றை திரித்து பேசுகிறார். மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்தி அவர் இடத்தில் இந்து மகாசபைவை உருவாக்கிய சாவர்க்கரை உட்கார வைக்க நினைக்கிறார்.
இவர்களால் இந்தியாவிற்கு மிக பெரிய ஆபத்து காத்து கொண்டுள்ளது. சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி, தனக்கு ஆட்சி பொறுப்பு வேண்டாம் எனக் கூறி ஜவஹர்லால் நேருவை பிரதமராக்கினார். ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மகாத்மா காந்தியை இழிவு படுத்துவது வழக்கம் தான். நாம் அனைவரும் சேர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினரை எதிர்க்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி (ETV Bharat Tamil Nadu) ஆளுநர் மகத்மா காந்தி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸுக்கு, ஆளுநருக்கும், மகாத்மா காந்திக்கும் சம்பந்தம் இல்லை. இந்திய தேச மக்கள் மகாத்மா காந்தியை சுட்டது யார்? அதற்காக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து யார்? அதனால் சிறைவாசம் இருந்தது யார்? என தெரிந்து கொள்ள வேண்டும். அமித்ஷா மகாத்மா காந்தியை தவறுதலாக சித்தரித்தாலோ, அம்பேத்கரைப் பற்றி தவறாக பேசினாலோ அதை கண்டிக்கும் உரிமை இந்திய குடிமக்களான நாம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
டங்ஸ்டன் தமிழ் நாட்டிற்க்குள் வந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன் எனக்கூறி டங்ஸ்டன் போராட்டத்திற்கான உறுதியான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே, டங்ஸ்டன் ரத்து குறித்த அறிவிப்புக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மத்திய அரசு மாநிலத்திற்கான திட்டத்தை முன்மொழியலாம். ஆனால், மாநில அரசுதான் வழி மொழிய வேண்டும். அப்போதுதான் எந்த திட்டமாக இருந்தாலும் நிறைவேற்றப்பட முடியும். இது தெரியாமல் அண்ணாமலை விவசாயிகளை, அழைத்து சென்றதால்தான் டங்ஸ்டன் ரத்தனது என சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க:சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னதாக நிகழ்ச்சி மேடையில்பேசிய சி.பி.எம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன், “மகாத்மா காந்தி படுகொலை செய்துள்ள காலத்தை விட இன்றைய காலம் மோசமாக உள்ளது. இந்திய நாட்டை மத வெறி சக்திகள் ஆளும் நிலை ஏற்பட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று ஒவ்வொரு நாளும் அனுபவித்து கொண்டு உள்ளோம். வெளி உலகுக்கு ஜனவரி 30ஆம் தேதி காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டும்தான் தெரியும். ஆனால், ஏழுமுறை அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது யாருக்கும் தெரியாது. இந்த நாட்டில் மதவெறி சக்திகள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய சேதம் சாதாரணமான சேதம் அல்ல.
மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து விடுதலைக் கிளர்ச்சியில் பங்கு இல்லை, ஏகாதிபத்தியத்திற்கு சேதம் செய்யும் அமைப்பாக இருந்தது. மத பிரிவினையை உண்டாக்கி ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் தான் இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸும். அவர்கள் விதைத்த விதையால்தான் இந்தியா இன்று இரண்டு கூறுகளாக இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிந்து உள்ளது. மகாத்மா காந்தி இந்த தேசத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று போராடினார். ஆனால். வெற்றி பெற முடியவில்லை” என்றார்.