சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே மல்லிபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி (26), நேற்று புதன்கிழமை (நவம்பர் 20) பள்ளி வளாகத்திலேயே மதன் (30) என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சம்பவம் நடந்த பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்து, உயிரிழந்த ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பின்னர், அவற்றை திருத்தம் செய்து இரண்டாவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தஞ்சையில், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியையாக பணியாற்றிய ரமணி பள்ளியில் இளைஞர் மதன் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொலைவெறி சம்பவம் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
சில நாட்களுக்கு முன்பாக கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை புற்றுநோய் பிரிவில், சிகிச்சை பெற்று வந்தவரின் மகன் விக்னேஷ், மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். மீண்டும் இதுபோன்ற கொடிய சம்பவம் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்கு உள்ளே நடந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
செல்வப்பெருந்தகை கடைசியாக வெளியிட்ட அறிக்கை (இடது), முதலில் வெளியிட்ட அறிக்கை (வலது) (ETV Bharat Tamil Nadu) இத்தகைய கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்கு இளைஞர்கள் மத்தியில் எப்படி துணிச்சல் வருகிறது என்று தெரியவில்லை. தொடர்ந்து, இத்தகைய சம்பவங்கள் நடைபெறுமேயானால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தலைதூக்குவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசுஉரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதையும் படிங்க:தஞ்சை ஆசிரியை கொலை நடந்த பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையையும், தகுந்த பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும்," இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், அவற்றை திருத்தம் செய்து இரண்டாவதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், முதல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த, "கலைஞர் நூற்றாண்டு மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெறுமேயானால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தலைதூக்குவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்," என்பதை நீக்கி அறிக்கை வெளியிட்டிட்டுள்ளார்.
பல்வேறு தலைவர்கள் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இது போன்று சட்ட ஒழுங்கு என்ற வார்த்தையை எடுத்துவிட்டு திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்