திருநெல்வேலி: பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். முன்னதாக தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வந்தார். இதை ஒட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், அக்கட்சியினர் கையில் கருப்பு கொடி ஏந்தியபடி, பாளையங்கோட்டையில் உள்ள தனுஷ்கோடி ஆதித்தன் இல்லத்திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது அவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை முன்பு, கையில் கருப்பு கொடியுடன் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் மேடை நோக்கிச் செல்ல முயன்றபோது அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் உள்பட சுமார் 20 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். முன்னதாக மோடி வருகையைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என ஏற்கனவே உளவுத்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.