புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கார்த்தி சிதம்பரம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதில் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது, நிதி போதுமான அளவுக்கு உள்ளதா என்பது குறித்தும் அரசு அதிகாரிகளோடு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று அந்தக் கட்சியின் கொடி வெளியீடு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது. நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். நீட், ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் விஜயின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்விலும் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். வெறும் கட்சியை அறிவித்துவிட்டு, கொடியை வெளியிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. எல்லோரிடமும் தான் தமிழ் பற்று, தேசப்பற்று உள்ளது. எனக்கும் தான் தேசியப்பற்று உள்ளது.
அவரது கொள்கை என்ன என்பதை விவரிக்க வேண்டும். விஜய் தனது கொடியை அறிமுகப்படுத்தி வைத்தது குறித்து நான் எந்த கருத்தும் கூற முடியாது. தனியாக கட்சி நடத்துவது என்ன என்பது அவருக்கு பட்டால்தான் தெரியும். விஜயும் பட்டு தெரிந்து கொள்வார்.
முதலமைச்சரின் நிவாரண நிதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடுத் தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாது. நடந்த பிறகு விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனைதான் பெற்றுக் கொடுக்க முடியும்.
இதற்கு சமுதாய மாற்றம் அவசியமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது” என்றார்.
தமிழகத்தில் வாய்ப்பு கொடுத்தால் பாஜக தலித் முதலமைச்சரை உருவாக்குவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர், “எச்.ராஜா அண்ணாமலையைக் கேட்டு சொல்கிறாரா? கேட்காமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சீமான் அரசியல் கருத்துக்களைப் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை குறித்தும், அவர்களுடைய பிரச்னையை குறித்தும் பேசுவது தவறு. இது அரசியலுக்கு அழகல்ல. வக்ஃபு வாரிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு கிடையாது. அதற்குண்டான பலமும் மத்திய அரசுக்கு கிடையாது” என்றார். மேலும், கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா சர்ச்சை குறித்து பதில் அளித்த அவர், “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மேல்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:வாகைப்பூவுக்கு அதிகரிக்கும் மவுசு.. விஜய்க்கு வெற்றி வாகை சூடுமா வாகைப்பூ? தவெக கொடியின் மூலம் தெரிவிப்பது என்ன?