கரூர்:காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கரூர் கோவை சாலையில் உள்ள ராமாகவுண்டன்புதூர் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஊராட்சியில் கரூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய நூலக கட்டிடப் பூமி பூஜை பணிகளைத் துவக்கி வைத்தார்.
இதன் பின்னர் ஈ.டிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்திற்கு எம்பி ஜோதிமணி அளித்த பிரத்தியேக பேட்டியில், “பொதுவாகக் கோயில் கும்பாபிஷேக விழாவை, அரசியல் கட்சி கூட்டம் போல யாரும் இந்தியா முழுவதும் நடத்திட முடியாது. கோயில் குடமுழுக்கு விழாவுக்கு என ஆகம விதிமுறைகள் உள்ளது.
கும்பாபிஷேகத்தைக் கட்சிக் கூட்டம் போல நடத்துகிறது பாஜக:கோயிலை முழுமையாகக் கட்டி முடித்த பிறகு கோயில் சிலையைப் பிரதிஷ்டை செய்து ஆகம விதிமுறைப்படி மக்கள் பார்வைக்குத் திறந்து வைப்பார்கள். இதனை நான்கு சங்கராச்சாரியார்கள் வலியுறுத்திக் கூறி வருகின்றனர். ஆனால் ராமரின் சிலை இன்று அயோத்தியில் குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு முன்னரே, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் போலப் பாரதிய ஜனதா கட்சி நடத்துகிறது. இவ்வாறு நடத்துவது, அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை அழைப்பை ஏற்கவில்லை. இந்தியாவின் பிரதமர் என்பவர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு பெண்களை அதிகாரப்படுத்துதல் விவசாயிகளின் வளர்ச்சி சிறு, குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சி குறித்துப் பேச வேண்டும்.
ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது பாஜக: தேர்தல் நேரத்தில், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்காக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என கூறினர். ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 15 லட்சம் கருப்புப் பணத்தை மீட்டு வழங்குவோம் என கூறினர். இளைஞர்களின் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என கூறினர். ஆனால் தற்போது, பாரதிய ஜனதா கட்சி அறம் சார்ந்த அரசியலுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். ஆகம விதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பெட்ரோல் விலை, கேஸ் சிலிண்டர் விலை ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளது. இதைப் பற்றி மக்கள் நிச்சயம் யோசிப்பார்கள். ராமர் கோயில் விழாவை வைத்து வலுக்கட்டாயமாக மக்களை தன் பக்கம் திசை திருப்பப் பார்ப்பது நிச்சயம் நடக்காது. மிக நிச்சயமாக எதிர்வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடையும் என்று தெரிவித்தார்.
மேலும், நேற்று கூட மதத்தை வைத்து மக்களைப் பிளவுபடுத்த பாஜக முயற்சித்து வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். மதம் என்பது தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கை. 17 ஆண்டுகள் இந்தியாவில், ஜவர்கலால் நேரு பிரதமராக இருந்துள்ளார். அனைத்து மத மக்களின் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையாக இந்தியப் பிரதமர் பதவியை அலங்கரித்தார். தமிழ்நாட்டில் கூட கலைஞர் கருணாநிதி ஐந்து முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார் இவர்கள் யாரும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் எதிராக இருந்தது கிடையாது.