காங்கிரஸ் நிர்வாகி பேட்டி திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இவருடைய பிரச்சாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வருகை மிகக் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், திருநெல்வேலி தொகுதியில் திமுக நிர்வாகிகள் தான் பெரிய அளவில் அக்கறை எடுத்து பிரச்சாரத்தை முன்னின்று நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸில் உள்ள நிர்வாகிகள் ஒதுங்கிக் கொண்டாலும் கூட திமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர், அமைச்சர், எம்.பி உட்பட முக்கிய நபர்கள் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து தொடர்ச்சியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சும் தனது சொந்த கட்சி நிர்வாகிகளை அனுசரித்துச் செல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், எப்படியும் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற அலட்சியத்தோடு செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சின் செயல்பாடு அவரது வெற்றிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பட்டியல் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸின் கைச்சின்னம் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் வேட்பாளர் கட்சியினரை அணுகும் முறை அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாகச் சமீபத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கே.வி.தங்கபாலு எங்களைப் பார்த்து நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டாம். திமுக அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் தனியாக எந்த வேலையும் பார்க்க வேண்டாம் எனக் கூறுகிறார்.
இதனால் வெற்றி பாதிக்கப்படும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. மேலும் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக இது அமைந்து விடும். குறிப்பாக, இந்த நடவடிக்கை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சாதகமாக அமைந்து விடும்.
ஆளும்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால், எப்படியும் எளிதில் வெற்றி பெற்று விடுவோம் என்ற ஆணவத்தில் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நடந்து கொள்கிறார். இன்னும் பல கிராமங்களில் சின்னம் கூட வரையப்படவில்லை. வேலை அதிகமாக இருக்கிறது.
இது போன்ற சூழ்நிலையில், திமுகவினர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்று எங்களை ஒதுங்கி நிற்கச் சொல்கிறார்கள். எனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து எங்களுக்குத் தேர்தல் பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"திமுகவுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் ரூ.1000 நிறுத்தப்படும் என மிரட்டல்" - சேலத்தில் ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு! - Lok Sabha Elections 2024