கரூர்:இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பெருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி துவங்கி நிறைவடைந்துள்ளது. 7 கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவு நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடந்து முடிந்தது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 294 இடங்களிலும், இந்தியா கூட்டணி கட்சிகள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
அதில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மகத்தான சாதனையை படைத்துள்ளது என்றே கூறலாம். ஒரு இடத்தில் கூட பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் 2வது முறையாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் சுற்று துவங்கி இறுதி வரை நடந்த 25 சுற்றுகளிலும் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளி, இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியே முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1 லட்சத்து 66 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
- மொத்தம் பதிவான வாக்குகள் - 11,25,359
- பதிவான வாக்கு சதவீதம் - 78.70 சதவீதம்
- போட்டியிட்ட வேட்பாளர்கள் - 54
இறுதிச்சுற்றில் பெற்ற வாக்குகள்:
வ.எண் | கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் |
1. | காங்கிரஸ் | ஜோதிமணி | 5,34,906 |
2. | அதிமுக | தங்கவேல் | 3,68,090 |
3. | பாஜக | செந்தில்நாதன் | 1,02,482 |
4. | நாதக | கருப்பையா | 87,503 |
5. | நோட்டா | 8,275 |