தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அவரிடம் எந்த போதை பொருளும் இல்லை'.. அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமீன்! - ALI KHAN TUGHLAQ BAIL

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான், மகன் அலிகான் துக்ளக் (கோப்புப்படம்)
நடிகர் மன்சூர் அலிகான், மகன் அலிகான் துக்ளக் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 1:42 PM IST

சென்னை: சென்னை ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய பகுதியில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஜெ.ஜெ. நகர் பகுதியில் போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்கிற கல்லூரி மாணவனை கைது செய்து, அவரிடம் இருந்து 17 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதைப் பொருளும், 3 கிராம் ஓ.ஜி. கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், ஆன்லைன் செயலி மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியும், அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21), மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20), ஆருணி (20) மற்றும் மேலும் ஐந்து பேரை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின்பு சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு கைதான கார்த்திகேயனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கும் இவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அலிகான் துக்ளக் (26) உட்பட அவரது நண்பர்கள் ஏழு பேர் டிசம்பர் 4ம் தேதி கைதாகினர்.

அலிகான் துக்ளக் (credit - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:தமிழகத்திலும் நுழைந்த HMPV வைரஸ்.. சென்னை, சேலத்தில் இருவருக்கு தொற்று பாதிப்பு!

இதையடுத்து இவர்கள் ஏழு பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அலிகான் துக்ளக் உட்பட அவரது நண்பர்கள் நான்கு பேரும் போதை பொருளை பயன்படுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், அலிகான் துக்ளக்கிடம் இருந்து எந்த போதை பொருளும் பறிமுதல் செய்யவில்லை என்றும் மற்ற குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்ததாக தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, தினமும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் காலை கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details