சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தேர்தல் விதிகளை மீறியதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, அதனை மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீறி உள்ளார்.
அதனால் தான் அவர் மீது புகார் அளித்துள்ளோம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்போம் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கும் படியும் புகார்கள் அளித்துள்ளேன். மேலும், முதலமைச்சரின் இது போன்ற அறிவிப்பினால் தேர்தல் நியாயமாக நடைபெற வழிவகுக்காது. ஆகையால், இந்த தேர்தலை ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊடகங்கள் மூலம் வெளியிட்டது. இதன் மூலம் அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.