புதுடெல்லி: "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவைக்குள் வருவதே இல்லை" என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75ஆவது ஆண்டை முன்னிட்டு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றினார். அவரது உரையில் அரசியல் சட்ட முகவுரையில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் இடம் பெறவில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான இன்று மாநிலங்களவையில் அதானி மீதான புகார் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட 18 ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கான நோட்டீஸ்களை மாநிலங்களவை சபாநாயகரிடம் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அளித்திருந்தனர்.ஆனால், 18 ஒத்தி வைப்பு தீர்மானங்களின் நோட்டீஸையும் மாநிலங்களவை சபாநாயகர் தங்கர் தள்ளுபடி செய்து விட்டார். இதனால் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் இட்டனர். எனவே மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'வாய்ப்பே இல்லை'.. யார் சிஎம் விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்..! முட்டி மோதும் சிவசேனா...
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா,"பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் அவைக்கு உள்ளே அவர் வருவதில்லை. எந்த ஒரு விஷயம் குறித்தும் விவாதத்திற்கு பாஜக அரசு தயாராக இல்லை, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் யாரேனும் கேள்வி கேட்டால் எழுந்து பதில் சொல்லும் பொறுப்பை பிரதமர் மோடி தட்டிக்கழிக்கிறார். நாடாளுமன்ற அவைகளின் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்றால் இவர்கள் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அதிகாரம் அதிகரிக்கும்போது பொறுப்புடமையும் அதிகரிக்கிறது என்பதை ஆளும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். மணிப்பூர் கலவரம், அதானி மீது அமெரிக்காவின் குற்றச்சாட்டு, உத்திரபிரதேசத்தில் சம்பல் பகுதியில் தொடரும் இரு பிரிவினருக்கிடையிலான சண்டை என எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து எந்த விவாதத்தை தொடங்கினாலும் அதை பேச அவைத்தலைவர் அனுமதி மறுத்து அவையை ஒத்தி வைக்கிறார். அதானி விஷயத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது,"என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்