தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதியான மகாமக குளம் அருகே தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு (TELC) சொந்தமான நூற்றாண்டுகள் கடந்த பழமையான தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த பள்ளி மற்றும் அது அமைந்துள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மோசடி நடந்துள்ளதாகக் கூறி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் முன்னாள் ஆயர் டேனியல் ஜெயராஜ், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், 'கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு (TELC) சொந்தமான நூற்றாண்டுகள் கடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தொடக்கப் பள்ளிக்கு, இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பாச்சூர் கைவண்டூர் கிராமம் கலைஞர் நகரைச் சேர்ந்த ஜான் என்பவரது மகனான ஜான் சாமுவேல் என்பவரை சொத்து அதிகாரியாக நியமித்தது போல போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.
மேலும் அதனை ஆதாரமாக கொண்டு, கடந்த 2024 ஏப்ரல் 4ஆம் தேதி கும்பகோணம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 1891ஆக, கும்பகோணம் அருகேயுள்ள கடிச்சம்பாடி உடையார் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சக்தி என்பவருக்கு ஜென்ரல் பவர் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பவர் பத்திரத்தைத் துணையாக கொண்டு, கடிச்சம்பாடி சக்தி என்பவர் பள்ளி கட்டிடத்துடன் கூடிய காலி மனையை, முழுமையாக காலி மனை என்று குறிப்பிட்டு பத்திரப்பதிவு துறையினரின் துணையோடு, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்தை ரூபாய் 17 லட்சத்து 81 ஆயிரத்து 200க்கு சென்னையைச் சேர்ந்த ரவி என்பவருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்' என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.