சென்னை:சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின். வழக்கறிஞரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “போக்குவரத்து விதிமுறைகளை மீறி டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேபோல், விஜே சித்து என்பவர் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில், அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி காரில் செல்போன் பேசியபடி காரை இயக்கியதால் அவர் மீதும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி” புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, புகார் அளித்தபின் ஷெரின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, தற்போது அதேபோல் விஜே சித்து என்பவர், அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அஜாக்கிரதையாக செல்போனில் பேசிய படியே காரை இயக்கியிருக்கிறார்.
இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும். இது மட்டுமல்லால், அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்களையும் பேசி வருகிறார். இதனால் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
எனவே, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிக் கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறிய விஜே சித்து (VJ Siddhu) மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்க” புகார் கொடுத்திருப்பதாக வழக்கறிஞர் ஷெரின் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் யாரைச் சார்ந்தும் இந்த புகாரை கொடுக்கவில்லை, பொதுநலன் கருதி இந்த புகாரை அளித்துள்ளோம், விஜே சித்து உட்பட யார் விதிமீறல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷெரின் கூறினார். சில நாட்களுக்கு முன்பு போன் பேசியவாறு காரை ஓட்டியதாக டிடி எஃப் வாசன் மீது வழக்கு பதிந்து பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் தாய், குழந்தைகளின் சடலம்... உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி.. தருமபுரியில் சோகம்!