சென்னை:ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளை மண் மேடாக்கும் வகையிலும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நாளை (டிச 16) தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, டிசம்பர் 16ம் தேதி நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசேதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.
நடைமுறை சாத்தியமில்லாத இந்த ஜனநாயக விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது. இந்த சட்டமுன்வரைவு நிறைவேற்றப்படவேண்டுமானால் அரசியல் சட்டத்தில் ஆறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசியல் சட்டத்திருத்தங்களை செய்யவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை.
இது நன்றாக தெரிந்தும் கொடுங்கோன்மையை கோலோச்ச செய்யும் இந்த சட்டமுன்வரைவை கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. அனைத்திலும் ஒற்றை தன்மையை திணிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவின் அராஜகத்தின் ஒரு பகுதியே இந்த மசோதாவாகும்.