சென்னை:சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லக்கூடிய மாநகரப் பேருந்தை ( தடம் எண் 101), செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று மாலை ஓட்டி வந்துள்ளார். பேருந்தானது பீச் ஸ்டேஷன் நிலையத்தில் நின்றபோது 10 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர்.
பின்னர் பேருந்தில் கூச்சலிட்ட மாணவர்கள், ஆபாச பாடல்கள் பாடிய படி கலாட்டா செய்து வந்துள்ளனர். இதனை கண்ட நடத்துநர் "அமைதியாக இருங்கள், இல்லையென்றால் இறங்கி விடுங்கள், பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள்" என மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பாடியபடி பயணம் செய்துள்ளனர். இதனால் நடத்துநருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் பிரபாகரன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திருவொற்றியூர் பேருந்து நிலையத்திற்கு வந்த போலீசார், பேருந்தின் தானியங்கி கதவை மூடிவிட்டு உள்ளே சென்று மாணவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 2 கத்திகள் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் அனைவரையும் ரோந்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மற்றும் ஜெயின் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்த போலீசார் கடுமையாக எச்சரித்தனர். மேலும் இனி இதுபோன்ற தவறுகளில் ஈடுபடமாட்டோம் என மாணவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:மகன் இறந்தது தெரியாமல் 42 நாட்கள் தேடிய தாய்.. ஆதரவற்ற உடல் என அடக்கம் செய்த போலீஸ்..! சென்னையில் துயரம்!