சென்னை:சென்னை தியாகராய நகரிலிருந்து குன்றத்தூர் வரை 88K தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்தானது இன்று மதியம் வழக்கம் போல குன்றத்தூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, செல்லம்மாள் கல்லூரி அருகே 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர்.
இதில், சில மாணவர்கள் மட்டும் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் கிண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரைக் கண்டதும் உடனடியாக கல்லூரி மாணவர்கள் கீழே இறங்கி கலைந்து சென்றனர். சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அராஜகம் செய்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. ரூட்டு தல பிரச்னையில் மாநில கல்லூரி மாணவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இணைந்து தாக்கி கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகரப் பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.