மதுரை: மதுரையை சேர்ந்த பெண் பேராசிரியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தால் இந்த கல்லூரி நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ராமகிருஷ்ணன் என்பவரை வாழ்த்துவதற்காக சென்றபோது புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இரண்டு நாட்கள் கழித்து என்னிடம் பேசிய பதிவாளர் தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டால் சிண்டிகேட்டில் பதவி பெற்று தருவதாக தெரிவித்தார். மேலும், சென்னை வரும்போது தனியாக வாங்க சொகுசு விடுதியில் அரை எடுத்து தருகிறேன் என்றார்.
அதோடு தொடர்ச்சியாக எனது புகைப்படத்தை மார்பிங் செய்தும், அலைபேசி மூலமாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இது தொடர்பாக உயர்கல்வி துறையின் செயலரிடம் புகார் அளித்த நிலையில், பதிவாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.
புகாரை திரும்ப பெற மிரட்டல்
தொடர்ந்து என்னை கண்காணித்து வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், புகாரை திரும்ப பெறுமாறு என்னை மிரட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க:'இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும்'.. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பேட்டி..!
நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பின்பும், அவரை கைது செய்து விசாரணை நடத்தாமல் அலட்சியமான போக்கையே கையாளுகின்றார். திருமங்கலம் மகளிர் காவல் நிலையம் இந்த வழக்கை விசாரித்தால் எனக்கு நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மாற்றி வேறு விசாரணை அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. கல்லூரி முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்லூரியின் பெண் முதல்வருக்கு இது போன்ற பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்தும் உள்ளது. ஆனால், இதுவரை பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை வேறு விசாரனை பிரிவுக்கு மாற்ற வேண்டுமென வாதிட்டார்.
அப்போது நீதிபதி, '' வழக்கு பதிவு செய்து பல மாதங்கள் ஆகிறது.. குற்றம் சாட்டப்பட்ட பதிவாளருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றமும் மறுத்துவிட்டது. ஆனால், இதுவரை அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு கல்லூரியின் பெண் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என கருத்து தெரிவித்து, இந்த வழக்கில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை டிசம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.