கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த லெமூர் கடற்கரை ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் சுற்றுலா வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதில் மீட்கப்பட்ட 3 மாணவிகள் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தும், இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆபத்தான பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம்.
இது குறித்து, காவல்துறை, கடலோர காவல்படை, வருவாய்த் துறை, மீன்வளத் துறை, சுற்றுலாத்துறை என சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். மாவட்டத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் இன்னும் விலக்கப்படவில்லை. சுற்றுலாத் தலங்கள், கிராம பஞ்சாயத்து, டவுண் பஞ்சாயத்துப் பகுதிகளில் இருப்பதால் ஊராட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தோம். இருப்பினும் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்துள்ளது.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பேரிடர் மீட்புப் படையினரும் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்கள் அனைத்திலும் மீனவர்கள் சார்ந்த அமைப்புகள், கமிட்டி போன்றவை இருக்கிறது. இருப்பினும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் செல்வதைத் தடை செய்ய வேண்டும், காவல்துறையினர் மூலமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கன்னியாகுமரி கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்! - Kanniyakumari Tourist Death