தூத்துக்குடி: சாத்தான்குளம் ஒன்றாவது வார்டு பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக குடிதண்ணீர் சரிவர வழங்கவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 2) சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து பேரூராட்சி நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் பிரச்னைக்கு 15 நாட்களுக்குள் தீர்வு அளிப்பதாகவும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தண்ணீர் கூடுதல் இணைப்பு கொடுப்பதற்கும் எந்த பணிகளைச் செய்வதற்கும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து மக்களுக்கு விளக்கம் அளித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இன்று (மே.4) மாவட்ட ஆட்சியர் தரப்பில் சாத்தான்குளம் ஒன்றாவது வார்டு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்று தரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சாத்தான்குளம் ஒன்றாவது வார்டு பகுதியில் உள்ள பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால், மின் மோட்டார் இல்லாத வீடுகளில் தண்ணீர் குறைவாக வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள உயர்நிலை மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் திறந்து விடும் பணியாளர் தண்ணீர் தொட்டியில் நல்லியைச் சரிவரத் திறக்காததது இந்த பிரச்னைக்கு காரணம் எனவும் கூறியுள்ளனர். மேலும், அந்த நல்லியைச் சரிவரத் திறக்காத பணியாளரை மாற்றம் செய்து வேறு ஒரு பணியாளரைத் தண்ணீர் திறப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சவுக்கு சங்கரை கைது செய்து சென்ற கார் விபத்து.. சவுக்கு சங்கருக்கு காலில் காயம் எனத் தகவல்? - Savukku Shankar