கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம், கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி (47). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவரை இழந்த இவர், தனது 7.5 பவுன் தங்கச் சங்கிலியை ஒரு கவரில் போட்டு வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை போட்டு வைத்திருந்த கவரை தவறுதலாக குப்பையில் போட்டு குப்பையை சேகரிக்க வந்த தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்துள்ளார்.
பின் சிறிது நேரத்தில் அவர் தனது நகையைத் தேடி பார்த்த போதுதான், அவருக்கு நியாபகம் வந்துள்ளது, நகையை அந்த கவரில் வைத்திருந்தது. பின் அதை தவறுதலாக குப்பையில் போட்டுவிட்டதை உணர்ந்த சிவகாமி, உடனடியாக 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் உதவியுடன் நகையை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.
இதனையடுத்து தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மணிகண்டன், தூய்மைப் பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோர் அப்பகுதியில் சேகரித்த குப்பைகள் மட்டுமின்றி, அந்த பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் சேகரித்த குப்பைகளான ஒன்றரை டன் குப்பையை தரையில் கொட்டி, சுமார் ஆறு மணி நேரம் தேடி சங்கிலியை கண்டுபிடித்தனர்.