தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதிப்பெண் குறைவு காரணமாகக் கல்லூரி மாணவி தற்கொலை; சக மாணவர்கள் போராட்டம்! - College girl committed suicide

College girl committed suicide: கோவை அருகே தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி, கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பெண் குறைவு காரணமாக கல்லூரி மாணவி விடுதியிலேயே தற்கொலை
மதிப்பெண் குறைவு காரணமாக கல்லூரி மாணவி விடுதியிலேயே தற்கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 7:09 PM IST

கோயம்புத்தூர்:மதிப்பெண் குறைவு காரணமாகக் கல்லூரி மாணவி, கல்லூரி விடுதியிலேயே இன்று (ஏப்.30) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் உஷா தம்பதியினரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தவர் மாணவி பவித்ரா. இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.29) கல்லூரி தேர்வு மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு சில பாடங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த மாணவி பவித்ரா, மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவர் தனக்குக் கல்லூரிக்கு வர விருப்பம் இல்லை எனக் கூறி, தன்னுடன் தங்கியிருந்த சக மாணவிகளிடம் விடுப்பு விண்ணப்பத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

மாணவி பவித்ரா அனுமதி பெறாமல் விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பியது குறித்து விடுதி காப்பாளரிடம், கல்லூரி நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். இதனையடுத்து விடுதி காப்பாளர் மாணவி பவித்ராவின் அறைக்கு சென்று பார்த்த போது அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இந்நிலையில் அதிர்ச்சியடைந்த விடுதிக்காப்பாளர், கல்லூரி நிர்வாகம் மூலம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாணவி மதிப்பெண் குறைவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த சக மாணவ மாணவியர்கள், பவித்ராவின் தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகத்தினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் மாணவி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பெண் குறைவு காரணமாகக் கல்லூரி மாணவி தற்கொலை; சக மாணவர்கள் போராட்டம்!

இதையும் படிங்க: திருச்செந்தூர் அருகே சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; பெண் பலி! - Tourist Vans Accident

ABOUT THE AUTHOR

...view details