கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த 3ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, அதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார். உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் திமுக, அதிமுக, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மேயர் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பது பொருளாக வைக்கப்பட்டது. ஜூலை ஒன்றாம் தேதியிட்ட கடிதத்தில் மேயர் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி இருப்பதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.
அதன் பின்னர், மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுகவின் செ.ம.வேலுச்சாமி மேயராக இருந்து ராஜினாமா செய்தபோது விவாதம் நடத்தினீர்களா என கேட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. அதனையடுத்து கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி கூட்டம் துவங்கிய 9 நிமிடத்திலேயே நிறைவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.