கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலானது நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த மாவட்ட ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
அந்த வகையில், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. இந்த பணியானது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரின் முன்னிலையில் பாதுகாப்பாக நடைபெற்றது.
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஸ்டாராங் ரூமை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சீல் வைத்தார். இந்த கல்லூரி வளாகத்தில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.